Breaking

Post Top Ad

Saturday, June 8, 2019

மட்டக்களப்பில் இடமாற்றங்களில் மோசடி? தகவல்களை வழங்கவும் மறுப்பு! - தகவலறியும் உரிமைக்கு எழுந்துள்ள சிக்கல்


கடந்த 2016 ஆம் ஆண்டு 12 ம் இலக்க தகவல்கள் பெற்றுக்கொள்வதற்கான உரிமைகளுக்கான சட்டத்திற்குச் சவால் விடும் வகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிர்வாகம் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும் நபர்களுக்குத் தகவல் வழங்க மறுப்புத்தெரிவிப்பதுடன் தகவல் பெற விண்ணப்பித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள நான்கு முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகள் தவிர்ந்த ஏனைய தமிழ் பிரதேச செயலகங்களில் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முஸ்லீம் பிரதேசங்களான கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி,  காத்தான்குடி ஆகிய பகுதிகளில் மட்டும் இடமாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

குறித்த இடமாற்றத்தில் மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல் வாதிகளின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது குறித்த தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முயன்ற சிலருக்குத் தகவல்களை வழங்க மாவட்ட செயலகம் மறுத்துள்ளதுடன் இது குறித்து மேல் முறையீடு செய்த இளைஞர் ஒருவரின் விண்ணப்பங்களில் உள்ள கையெழுத்தில் வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறி அவரை விசாரணைக்கு உட்படுத்த முயன்றுள்ளனர்.

தொடர்ச்சியாக 9 வருடங்களாக ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோகம் அரசியல் வாதிகளின் பின்புலத்தில் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் ஏற்றால் போல் செயற்படுதல் போன்ற ஆதாரப்பூர்வமான தகவல்கள் சமூகவலைத்தளங்கள் இணைய ஊடகங்கள் அச்சு ஊடகங்கள் ஊடாகவும் தொடர்ச்சியாக விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டு வரும் நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவான நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்ட 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலிருந்து தகவல்களைக் கோரும் போது பெரும்பாலான விடயங்களில் குறித்த சட்டத்தின் பகுதி II 5(அ) 1 பகுதிக்கு அமையக் குறித்த தகவல் நிராகரிக்கப் படுவதாக பதில் வழங்கும் செயற்பாட்டினையே மேற்கொண்டு வருகின்றனர்.



இவ்வாறான ஒரு நிர்வாகக் கட்டமைப்பு மாவட்டச் செயலகத்தில் செயற்பட்டுக் கொண்டுவரும் வேளையில் குறித்த சட்டம் சம்பந்தமாகப் பாமர மக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுக்குப் பிரதேச செயலக ரீதியாக தெளிவூட்டல்களை மேற் கொண்டு வருவது எந்த வகையில் பொருத்தமான விடயமாக இருக்கும்.

குறித்த சட்டத்தின் பகுதி II 5 அ I இல் கூறப்பட்டுள்ள நிராகரிப்பு விடயங்களுக்கு ஏற்றால் போல் நாட்டின் நீதி கட்டமைப்பு பாதுகாப்பு கட்டமைப்புக்குப் பாதிப்பினை ஏற்படும் தகவல்கள் ஏதும் மாவட்டச் செயலகத்தில் நிர்வகிக்கப்படுகின்றதா என்ற அடுத்த கட்ட கோரிக்கையினை முன்வைக்கும் நிலையில் சாதாரண பொது மக்கள் சந்தேகத்தினை ஏற்படுத்தும் நிலையினை மாவட்டச் செயலக நிர்வாகத்தின் நிலை ஏற்படுத்தியுள்ளது

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு வெளிப்படையான சேவையினை வளங்க  மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிர்வாகம் செயற்படுவது எப்போது என்ற கேள்வியைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்
(நன்றி வீரகேசரி)








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages