(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
அன்றையதினம் வீடுகள், கடைகள் உள்ளிட்ட 62 கட்டிடங்களுக்கு காற்றினால் ஏற்பட்ட பகுதிச் சேதத்திற்கு நிவாரணமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தீவிர முயற்சியால் இன்றையதினம் செவ்வாய்கிழமை (25) முதற்கட்ட நிவாரணமாக குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று இலட்சத்து எழுபத்தொரு ஆயிரம் ரூபா (371000) பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது.
மேற்படி நிதி பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
கொத்தியாபுலை பொதுக் கட்டிடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மண்முனை மேற்கு பிரதேச திட்டப் பணிப்பாளர் த.நிர்மலராஜ், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவநாதன், மாவட்ட அனர்த்த உத்தியோகத்தர் சயந்தன், மண்முனை மேற்கு பிரதேச செயலக தேசிய அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
.
வவுணதீவு பிரதேசத்தில் இலுப்படிச்சேனை, மண்டபத்தடி, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இக் காசோலைகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.