மூன்று இன மக்களும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தக் கூடிய அடித்தளத்தைக் கொண்ட ஒருவரே ஆளுநராக செயற்பட வேண்டும். தற்போதைய நிலையிலே இன்றைய ஆளுநர் அவர்கள் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருப்பது இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கு மாறாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி கிழக்கு ஆளுநர் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுப்பது கிழக்கு மாகாணத்தில் சுமூக நிலைமையையும், சமூக நல்லுறவையும் பேணிப் பாதுகாப்பது எனும் அவருடைய இலக்கிற்கு பொருத்தமாயிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்று 4ம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக பல விடயங்களை எமது கட்சி முன்மொழிந்துள்ளது. அதிலே ஆளுநர்கள், அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது என்பதும் ஒன்றாகும்.
இவ்விடயம் இடைக்கால அறிக்கையிலே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அரசியல்வாதியான றோஹித போகொல்லாகம அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவராக இல்லாதிருந்தமையால் அது பற்றி நாங்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய ஆளுநர் இம்மாகாணத்தைச் சேர்ந்தவராக உள்ளார்.
இதனை விட இவரது அரசியற் பின்னணி முற்றுமுழுதாக தமிழ் மக்கள் மீதான துவேசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
சந்திரிக்கா அம்மையாரின் முதலாவது ஆட்சிக் காலத்தில் 'பிராந்தியங்களின் ஒன்றியம்' என்ற அடிப்படையிலான அரசியல் வரைபு ஒன்று ஆக்கப்பட்டது. இதனை உருவாக்குவதில் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒத்துழைத்தது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் அவரது தலைவரையும், இத்தீர்வுத் திட்டத்தையும் எதிர்த்து மட்டக்களப்பு மாவட்;ட முஸ்லீம் பிரதேசங்களில் ஒருநாள் ஹர்த்தாலை கடைப்பிடிக்கச் செய்தார்.
இது தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான தனி ஒரு ஹிஸ்புல்லா அவர்களின் செயற்பாடாகும்.
இவரது கடந்தகால நடவடிக்கைகளை தொகுத்து நோக்குகின்ற போது கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து செயற்பட்டு வந்துள்ளார் என்பதும், தற்போதும் அதே செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார் என்பதும் மாகாண நிருவாகத்தை அரசியல் மயப்படுத்துகின்றார் என்பதும், தெளிவாகின்ற அதே வேளை இனங்களுக்குள்ளே துவேச உணர்வினை தூண்டிக் கொண்டிருக்கின்ற ஒருவராகவே இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
மூன்று இன மக்களும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தக் கூடிய அடித்தளத்தைக் கொண்ட ஒருவரே ஆளுநராக செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் சுமூக நிலைமையையும், சமூக நல்லுறவையும் பேணிப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இவ்விடயங்களைக் கவனத்தில் எடுத்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தலைமை நிருவாகியான ஆளுநர் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுப்பது அவருடைய இலக்கை அடைவதற்கு பொருத்தமாயிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.