Breaking

Post Top Ad

Friday, May 10, 2019

பாதுகாப்புத் தரப்பு விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது! - பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை. பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் வெள்ளிக்கிழமை 10ம் திகதியன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


தற்போது அவசரகால சட்டத்தினால் நாட்டில் பல்வேறு கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 21ம் திகதி இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் இன்றுவரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இத்தாக்குதல் தொடர்பில் முன்னமே தெரிந்திருப்பினும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அது தொடர்பான மேலதிக ஆராய்வுகள் நடைபெறவில்லை.தாக்குதல் தொடர்பான விடயம் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் முன்பு அரசியலில் இருந்தவர்களுக்குத் தெரியவந்திருக்கின்றது. எனவே இதற்குள் பல பிரச்சினைகள் தங்கியிருக்கின்றன. பாதுகாப்புச் சபைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி இருக்கின்றார். சட்டம் ஒழுங்குத் துறையையும் தனது அதிகாரத்தை மீறி வைத்திருக்கின்றார். கடந்த மாதம் பாதுகாப்புச் சபை கூடியும் இது தொடர்பில் எதுவும் ஆராயப்படவில்லை. பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அழைக்கப்படுவதில்லை என்பதுவும் மிகவும் விசேடமானது. தங்கள் அரசியலை வளர்க்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நாங்கள் பாரிய அச்சுறுத்தலுக்குள் உள்ளாகியிருக்கின்றோம்.

விசாரணைகளில் இது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் சஹ்ரான் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இக் குழுவினர் புலனாய்வுப் பிரிவிலும் இருந்துள்ளார்கள் என்ற கருத்தும் பேசப்படுகின்றது. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது புலனாய்வுப் பிரிவில் பல ஆயுதக் குழுக்கள் இருந்தன. கருணா அம்மான் தலைமையிலான குழு, பிள்ளையான் தலைமையிலான குழு, தற்போது இந்த தொஹீத் ஜமாத் அமைப்பும் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.


அண்மையில் யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், அதற்கு முன் வவுணதீவுப் பொலிசார் படுகொலையின் போது முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்.


தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை.


சஹ்ரான் குழுவினர் ஆயுதம் தொடர்பான விடயங்களைக் கையாளுகின்றார்கள் என்ற தகவல் 2017ம் ஆண்டிலேயே பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  இது தொடர்பில் பொலிசார் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான துன்பியல் நடந்திருக்காது. பொலிசார் அதில் கரிசனை காட்டவில்லை.

குண்டுத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும் புலனாய்வில் பிரிவில் இயங்கிய தௌஹீத் அமைப்பு. இதில் பாரிய சந்தேகம் உள்ளது. நாட்டில் தலைவருக்குத் தெரியாது, பிரதமருக்குத் தெரியாது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்குத் தெரிகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா, அரசியல் தரப்பில் சிலர் பின்னணியில் இருந்தார்களா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.


ஏனெனில் தற்போது அரசாங்கத்தில் பல பிரச்சனை. தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக தற்போதைய ஜனாதிபதி துடித்துக் கொண்டிருக்கின்றார். ஆட்சியை தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக இருக்கின்றார்ர். இவர்கள் இருவரையும் துரத்திவிட்டு தனது குடும்பம் கதிரையில் அமர வேண்டும் என்பதில் மஹிந்த கவனமாக இருக்கின்றார். இந்த வேளையில் தான் இந்தத் துன்பியல் இடம்பெற்றிருக்கின்றது.

அரச தரப்பு இன்னும் சுயநலமாக இருக்க முடியாது. தங்களில் சுயநலத்தில் இருந்து விலக வேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்துகொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சு இன்னொருவரிடம் கையளிக்கப்பட வேண்டு:ம். இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான தேடுதல்கள் நடாத்தப்பட வேண்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது.

அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages