Breaking

Post Top Ad

Saturday, January 5, 2019

ஓவியர் நாகு வேல் (நா.குமாரவேல்) அவர்களின் ஓராண்டு நினைவு இன்று ...

மலர்கின்ற மலர்களெல்லாம் இறையடி சேர்வதில்லை, இதுபோல் பூவுலக மாந்தர்களெல்லாம் மகிமை பெறுவதில்லை. பேறுபெற்ற பிறகிருதிகள் இறையாசி பெற்றவர்களாக அந்த வரிசையில் மறைந்த கிரானூர் ஓவியர் கலாபூசணம் நாகண்டாப்போடி குமாரவேல் பிரகாசிக்கிறார். 

காலத்தைவென்று காவியமானவன் நீ ஆனால் காலனை வெல்லமுடியவில்லையே அந்தோபரிதாபம். படிப்படியாக கலைப்படைப்புக்களை படைத்த உன்னை பட்டியலிட்டு கூறமுடியாமல் இருக்கிறேன். நிற்க சேவைப்படிகளை கடக்கமுடியாது பாதிவழிகளில் எமைவிட்டுச்சென்ற பரிதாபத்தினை எப்படி சீரணிப்போம் என்று கரையிலாத்துயரத்தில் ஆழ்ந்து நிற்கின்றோம்.


கடந்த 2018.01.05 அன்று அமரத்துவமடைந்த அவதார புருசர் திருவளர் நா.கு.வேல் (நா.குமாரவேல்) அவர்களது இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒரு துயர் சம்பவம். இவர் எனக்கு உடன் பிறவா சகோதரர். அன்னாரது பிரிவு வேளையில் அவரோடு வாழ்வில் நான் கலந்த நிகழ்வுகளை நினைவு கூர்வதை பெருமகிழ்வாக உணர்ந்து இதனைப் பகிர்கிறேன். ஈழவள திருநாட்டில் கிழக்கு கரைதனில் மட்டு மா நகருக்கு வடக்காக இருக்கும் கிரான் பதியில் திரு நாகண்டாப்போடி பொன்னம்மா தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாக 1950.07.22 அன்று மகனாக அவதரித்தார். அப்போது இது வெறும் பேறு என எண்ணினர், ஆனால் அது ஒரு அவதாரம் என கலை மாதா முத்திரை பதித்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. இவரொரு ஓவியத்தாயின் இளைய மகன்.

அவர் இளமை பராயத்திலிருந்து ஏதாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். உணர்ந்து கொண்ட பாடசாலையின் அதிபராக கடைமையாற்றிய கிரானைச்சேர்ந்த சி.சிவலிங்கம் அவர்கள் இவரின் கலையார்வத்தை வள்ப்பதற்கு உதவி புரிந்தார். திரு.நா.குமாரவேல் அவர்கள் தனது 13 ஆவது வயதிலிருந்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் மற்றும் பத்திரிகைக்களுக்கான படங்கள் வரைந்துள்ளார்;. அத்துடன் பலபோட்டிகளிலும் பங்குகொண்டு பரிசிலிகளையும் பெற்றுள்ளார். படிப்பை முடித்த கையோடு 17 வயதிலே காகிதாலையில் ஓர்; சித்திர வண்ண கலைஞருக்கான நியமணம் இவருக்காக காத்திருந்தது. இத் தொழில் இவரின் கலையை மேம்படுத்த உறுதுணையாக இருந்தது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது தன் கலைசார்ந்த படைப்பாளிகளைத் தேடிச்சென்று ஓவியக்கலைசார் நுட்பங்களை  கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்.  இந்தியாவின் தமிழ் நாட்டில் கலைக்கல்வியோடு சேவையும் செய்து புகழ் பெற்ற ஓவியக்கலைஞரும் வைத்தியருமான மண்ணின் மைந்தர் கலாபூசணம் திரு.மா.பி.குமார்;; அவர்களிடமும் அத்துடன் யாழ் மண்பெற்ற புகழ் பூத்த ஓவியக்கலைஞர் மணியம் அண்ணா அவர்களிடமும் பயிற்சியும் கலைநுட்பமும் பெற்றார், இவரிடமிருந்து மிக அதிகமான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். மேலும்  இவரைப்போன்ற சிற்பம் மற்றும் வர்ணப்பூச்சு கலைஞரான யாழ் தாமோதரம்பிள்ளை அவர்களிடமும் பயிற்சியும் ஆசியும் பெற்றதோடு இல்லாமல் கடல் கடந்து பிரபல தென்னிந்திய கலைஞர் விற்பன்னர் ஓவியர் திரு.வீரசந்தானம் அவர்களிடமும் பயிற்சிபெற்று தேர்ந்தவர் என்பது பின்நாட்களில் நமது தாய்த்திருநாட்டில் மிளிர்ந்த இவரது உயிடோட்டமுள்ள கலைப்படைப்புக்கள் சான்றுபகரும். 

தம் உயிரிலும் மேலாக மதித்த ஓவியக்கலை சம்பந்தமாக எதுவரை எட்ட முடியிமோ அதுவரை எட்டிப்பிடித்து கற்றறிந்து கலையாக்கங்களை சகலரும் பாராட்டும்படி படைத்தவர். எனவே இவரை படைப்பாளி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

மறைந்த மாபெரும் ஓவியகலைஞர் நா.கு.வேல் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத திருப்புமுனையாக கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை அரசவிருதான கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையானது தங்கப்பதக்கத்தில் முத்துப்பதித்ததுபோல அவரது கலையுலக சாகர பயணத்தில் ஒரு துடுப்பாக அமைந்தது எனலாம். 

அமரர் திரு நா.கு.வேல் அவர்களின் மறுபக்கம் பிரகாசமானதாகவும் பல்சுவை பொருந்தியதாகவும் இருந்தது என்பதனை பலர் அறிவர் சிலர் அறியாதிருப்பர். அவர்களுக்காக, எழுச்சிக் கவிஞர் மட்டுவின் மைந்தர் மாண்புறு மகன் காசி ஆனந்தன் அவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமான உறவையும் பேணியதுடன் இருவரும் தமது கலைப்படைப்புக்களை தம்மிடையே பகிர்ந்துகொள்ளும் மிகச்சிறந்த  கலைஞர்கள். மேலும் ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களோடு நட்புற்று ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த காலங்கள் மறைந்த கலைஞர் திரு.நா.குமாரவேல் அவர்களுக்கு அதிஉந்து சக்தியாக அமைந்தது எனலாம். ஈழத்துக்கலைஞர் தென்னிந்திய திரைப்படத்துறை கதாசிரியர் இயக்குனர் பாடலாசிரியர் நடிகர் என பல்வேறுபட்ட துறைகளில் பிரகாசித்தவர் ஈழத்து இரத்தினம், அவருடனும் ஓவியர் நா.கு.வேல் நெருங்கிய கலைத்தொடர்புகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது மட்டுமாநகர் தந்த கவியரசு செ.குணரெத்தினம் அவர்களுடன் நானும் தம்பி குமாரவேலும் வாழைச்சேனை காகிதாலையில் ஒன்றாக வேலை செய்ததுடன் மிக நெருங்கிய தொடர்பினையும்  வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து எளிமையான இனிமையான ஒரு கவிஞர் கறுவாக்கேணி கலாபூசணம் முத்துமாதவன்; அவர்களுடனும்  இணைபிரியாத நண்பர்களான இசை, நாடகம், எழுத்து ஓவியம், போன்ற பல்துறை கலைஞரான கிண்ணையடியைச் சேர்ந்த என் கே.தயாளகுணசீலன் மற்றும் இசைக்கலைஞரும் பாடகருமான கிரானைச் சேர்ந்த ம.சுந்தரலிங்கம் ஆகியோரின் கலைத்தொடர்புடன் கூடிய நீண்ட கால நட்பும் ஊக்குவிப்பும் இவரது ஓவியக்கலை வளர்ச்சிக்கு காரணமாயிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இவரைக்கரம்பிடித்த வாழ்க்கைத்துணைவியான திருமதி தேவராதா குமாரவேல் அவர்கள் இவரது படைப்புக்களுக்கு இரவு பகல் பாராது ஒத்தாசை வழங்கியமையும் இவரது கலைவாழ்க்கைக்கு மகுடமாக அமைந்தது.
திரு. நா.குமாரவேல் அவர்கள் பணிபுரிந்த, கவனிப்பாரற்று பாராமுகமாக இருந்த காகித ஆலையை அவ்வவ்போது அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கான பிரமாண்ட வரவேற்புத்தோரணங்கள் மற்றும் அலங்கரிப்பு, ஓவியக்கண்காட்சிப் போட்டிகளில்  தன் கைவண்ணத்தால் உயிர்பெறச்செய்து முழுநாடும் வியந்து பாராட்டிப் பரிசில்களையும் நற்பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுத்து, துவண்டுகிடந்த காகித ஆலையை அனைவரும் தலைநிமிர்ந்து வியப்போடு பார்க்க வைத்த பெருமை நா.கு.வேல் அவர்களையே சாரும்.
கடந்த 50 வருடங்களாக இவர் வரைந்த ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புக்களில் சில..

பாடசாலைக் காலத்தில் தனது 13 வது வயதிலிருந்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் மற்றும் பத்திரிகைக்களுக்கான படங்கள் வரைவதில் ஆவர்வம் காட்டினார். இதில் வியத்தகு பிரகாசத்துடன் கூடிய உயிரோட்டமான ஓவியங்களைப் படைத்திருக்கிறார். கிழக்கொளி மற்றும் ஒளவை ஆகிய கையெழுத்துப் பத்திரிகையின் கையெழுத்து மற்றும் அதற்கான ஓவியங்கள் இவரால் வரையப்பட்டது.
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு சாகுந்தலம் எனும் ஓவியம் இவரால் வரையப்பட்டது முதல் பரிசு பெற்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது.

வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற காப்பிய பெருவிழாவிற்கு வரைந்த கண்ணகி ஓவியம் கிழக்கு மாகாணத்தில் பலவேறு அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளுக்கான பிரமாண்ட வரவேற்புத்தோரணங்கள் மற்றும் அலங்கரிப்பினை தலைமையேற்று நிறைவேற்றியுள்ளார். இதற்காக பல பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். (1973 இல் தந்தை செல்வாவின் கிழக்கு விஜயத்தின் போது மட்டக்களப்பு முத்தவெளி, 1977 இல்  ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அம்பாரை விஜயம், சமூக சேவைகள் அமைச்சின் நுஓPழு 70 எனும் தேசிய கண்காட்சியில் வாழைச்சேனை காகிதாலையின் ஆக்கத்தை வடிவமைத்து தேசிய ரீதியில் ஆலையையும் பெயர் பெறச்செய்தமைக்காக இவருக்கு பாராட்டி விருது வழங்கப்பட்டது மற்றும் இன்னும் பல தோரணங்கள்;) பல தேசிய தலைவர்களின் உருவப்படங்களை காலத்திற்கு காலம் வரைந்து பாராட்டுப்பெற்றமை. (தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிறேமதாஸ, திருமதி.சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, டி.பி.விஜயதுங்க மற்றும் வி.முரளிதரன், சி.சந்திரகாந்தன் உட்பட இன்னும் பல பிரமுகர்களின் ஓவியங்கள்;)
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கடவுள்களின் திருவுருவப்படங்கள், திரைச்சீலைகள் மற்றும் நாயன்மார்கள், இயேசு கிறிஸ்து, புத்த பிரானின் ஓவியங்கள். இலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற கொழும்பு ராஜா பட மாளிகை மற்றும் செங்கலடி செல்லம், ஏறாவூர் சாரதா, மட்டக்களப்பு சாந்தி போன்ற சினிமா படமாளிகைகளுக்கு சினிமா நடிகர்களின்  நூற்றுக்கும் மேற்பட்ட கட் அவுட்களை வரைந்துள்ளார். இதில் 2017 இல் வரைந்த நடிகர் விஜய்யின் மெர்சல் கட் அவுட் இலங்கையில்  மிக உயரமான கட் அவுட் (85 அடி உயரம்).

அதுமட்டுமி;ன்றி சீகிரிய ஓவியம், மோனாலிஸா ஓவியம் மற்றும் சுவாமி இராமகிருஸ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலானந்தர், சுவாமி ஸ்ரீமத் சிவானந்தர் உட்பட பல சுவாமிகளின் திருவுருவப்படங்கள் மற்றும் பல தனிப்பட்டவர்களின் உருவப்படங்கள்.
அன்னை ஸ்ரீ சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் சுவாமி விபுலாந்தரின் நுற்றாண்டு நினைவு விழாக்களிற்கான ஊர்தி அலங்கரிப்புக்கள் பலரது பாராட்டையும் பெற்றது.

இந்து ஆலயக்கோபுர சிற்பங்களுக்கு வர்ணந்தீட்டி உயிரோட்டமிக்க கடவுளர்களாக செய்வது இவரின் தனித்திறமை ( கொழும்பு ஜிந்துப்பிட்டி கதிரேசர் சுவாமி கோயில், கிரான் மகா காளி அம்பாள் ஆலயம், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு காளிகோயில், வாழைச்சேனை காகிதாலை பிள்ளையார் ஆலயம், கறுவாக்கேணி முத்துமாரியம்மன் கோயில், மற்றும் இன்னும் பல)

2003 இல் இவர் இந்தியா சென்றிருந்த போது திமுக கட்சியின் வரலாறு தொடர்பிலான இவர் வரைந்த இரண்டு படங்கள் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்னும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் கலை வாரிசாக இவரது மூத்த மகன் கு.வினுக்குமார் அவர்கள் இவரது கலைப்பயணத்தை  முன்னெடுத்து செல்லுகின்றார் என்பதற்கு அவர் தனது தந்தையாரின் 31 ஆம் நாள் அஞ்சலிக்காக வரைந்து முடித்த தந்தையாரின் உருவப்படம் சான்றுபகர்கின்றது.

இப்படியான பேறுபெற்ற ஓவியக் கலைஞரான நா.குமாரவேல் அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் சொல்லி இவர் ஓர் சாகாப்தம் எனக் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றேன் புளகாங்கிதம் அடைகிறேன்.

மேலும் மறைந்த இவ் ஓவியர் ஞாபகமாக எம்மால் முடிந்த அவர் நாமம் என்றும் பிரகாசிக்கும் வண்ணம் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை சமூகம் ஏற்கும் படியாக கொணர்வதற்கு நாம் அனைவரும் பங்களிப்புச் செய்ய அறைகூவல் விடுக்கின்றேன்.இளையதம்பி மார்க்கண்டு;.
கிரான்
2019.01.05


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages