Breaking

Post Top Ad

Thursday, January 3, 2019

யாழ். வைத்தியசாலையில் நோயாளியிடம் நகை திருடிய பெண்! முல்லைத்தீவில் வைத்து கைது!

யாழ்.போதனா வைத்தியசாலையில் மடக்கி பிடிக்கப்பட்ட திருடி!யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.


யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அது தொடர்பில் வைத்திய சாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கமராக்களின் (சிசிரிவி) உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார்.

அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் மடக்கி பிடித்து காணொளி ஆதாரத்துடன் யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டு உள்ளது. அது தொடர்பில் அந்த வயோதிபப் பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.

அதனை அடுத்து கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது , வைத்தியசாலையில் முன்னர் நகைகளை திருடிய குற்றசாட்டில் தம்மால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதனை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர்.

அந்த காணொளியை ஆராய்ந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அந்தப் பெண்ணை முல்லைத்தீவில் வைத்து கைது செய்தனர். அத்துடன், மேலும் இரண்டு பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்ததையும் அவர் ஒத்துக்கொண்டார். அந்தச் சங்கிலி நகை வேலை செய்பவரிடம் விற்பனை செய்ததையும் சந்தேகநபர் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages