Breaking

Post Top Ad

Tuesday, December 4, 2018

மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை :முன்னாள் போராளிகள்


கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.


மட்டக்களப்பு, கல்லடியில் குறித்த கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் க.இன்பராஜா, ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாருக்கும் அஞ்சலி செய்யப்பட்டதை அடுத்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அங்கு இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இன்று முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளினால் போராளிகள் பாதிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மீதான விசாரணைகளினால் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் பெரும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் அச்சமற்ற சூழ்நிலையில் வாழ்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்து வாழும் சிலர் மாவீரர் தினத்தின் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இவ்வாறான செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை அச்சம்கொள்ள செய்துள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படும் போதே அவர்களின் அச்சம் நீக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் போராளிகள் இன்று மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை, யாரையும் சுட்டுக்கொல்லவேண்டிய தேவையும் இல்லையெனவும் குறித்த கட்சியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages