பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.
ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதைப் போலவே 7 எம்.பி.க்கள் வைத்துள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார்.
தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் இதைக் கூறினர்.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். தமது கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் செய்து, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உதவியோடு ஜனாதிபதி பதவிக்கு வந்தார் அவர்.
சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியையும் அவர் நடத்தி வந்தார். அந்தக் கூட்டணி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டணி அரசை நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் இலங்கையில் நடத்திவந்தன.
சுதந்திரக் கட்சியின் மைத்ரிபால ஜனாதிபதியாக உள்ளபோதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்தக் கூட்டணியில் இருந்து மைத்ரிபால வின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறுவதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் மைத்ரிபால சிரிசேன.
எதிரெதிர் துருவங்களாக இருந்த மைத்ரிபால வும் ராஜபக்ஷவும் தற்போது ஓரணியில் வந்துவிட்டனர். மாற்றுக் கட்சியில் இருந்தாலும் இணைந்திருந்த அதிபர் மைத்ரிபாலவும் ரணிலும் எதிரெதிர் அணிகளாகிவிட்டனர்.
இந்நிலையில், தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் தாமே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். இதனால், யார் உண்மையில் பிரதமர் என்ற அரசமைப்புச் சட்டக் குழப்பம் உருவானது
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி யாருக்கு ஆதரவு உள்ளது என்பதைப் பார்க்கவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தாமே இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டப்படி நியமிக்கப்பட்ட பிரதமர் என்றும், தாம் பதவியில் நீடிப்பதாகவும் ரணில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவுக்கு கடிதம் எழுதினார். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 42(4)ன்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை தாம் பெற்றிருப்பதாகவும் ரணில் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்.
இந்நிலையில்தான் ரணில் கோரிக்கைக்கு மாறாக தற்போது மைத்ரிபால சிரிசேன நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதிதான் வெளியிட முடியும்.
"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்த வெல தெரவித்துள்ளார்.
மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசி யக் கட்சியினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது"
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன-ராஜபக்ஷ அணிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததால்தான் அதனை ஒத்திவைக்கிறார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்க.
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு என்று கூறிய ரணில் உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோளும் விடுத்தார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார்.
இதனிடையே இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
Post Top Ad
Saturday, October 27, 2018
Home
Sri lanka
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ; தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு ! சம்பந்தன் கருத்து தெரிவிப்பு
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ; தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு ! சம்பந்தன் கருத்து தெரிவிப்பு
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.