
இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45 பொலிஸ் நிலையங்கள் மாதிரிப் பொலிஸ் நிலையங்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வாகரைப் பொலிஸ் நிலையம் மாதிரிப் பொலிஸ் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து வாகரைப் பிரதேசப் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள். ஆலோசனைக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிகளுடனான பரஸ்பர ஒத்துழைப்புக் கலந்துரையாடலொன்று வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் புதன்கிழமை 17.10.2018 இடம்பெற்றது.
ஆசிய மன்றத்தின் (ஏஷியா பவுண்டேஷன்) அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பொலிஸ் தரப்பு அதிகாரிகளும் வாகரைப் பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இயற்கை செயற்கை இடர்களின்போது செய்யப்படவேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
பொலிஸ் பொதுமக்கள் உறவை நெருக்கமாகப் பேணுவதன் மூலம் சமூகப் பதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டது.
மேலும், வாகரைப் பொலிஸ் நிலையத்தை நாடி வரும் பொதுமக்களின் நலனோம்பு விடங்களிலும் குறிப்பாக பெண்கள், யுவதிகள், சிறுவர்கள், பாலூட்டும் தாய்மார் ஆகியோரின் முறைப்பாடுகள் குறித்து முன்னுரிமையின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
பொதுமக்களாலும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மாதிரிப் பொலிஸ் நிலைய மேம்பாட்டுக்கும் பொலிஸ் பொதுமக்கள் உறவை மேம்படுத்துவதற்கும் உந்து சக்தியாக இருக்கும் என பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.