Breaking

Post Top Ad

Wednesday, October 24, 2018

பிக்குவின் அடாவடித்தனங்களைக் கண்டித்து பொது அமைப்புக்கள் பிரதேச செயலக அலுவலர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரின் அடாவடித்தனங்களைக் கண்டித்து வியாழக்கிழமை 25.10.2018 ஏறாவூர்ப்பற்றில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு மைலம்பாவெளியில் வைத்து ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம் மீது சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தாக்கியதாகவும்,  தொடர்ந்தும் தாக்க முற்பட்ட வேளையில் பிரதேச செயலாளர் சாதுரியமாகப் பின்வாங்கியதால் தாக்குதலில் இருந்து தப்பினார்.

அத்துடன் பிரதேச செயலாளருக்கு குறித்த பிக்குவால் மிக கீழ்தனமாக கெட்ட வார்த்தைப் பிரயோகாத்தை பலமுறை பிரயோகித்தவண்ணம் மீண்டும் மீண்டும் பிரதேச செயலாளரை தாக்க முற்பட்டிருந்தார்.இச்சம்பவத்தைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பிக்குமீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் அரசாங்க அலுவலர்கள் தங்கள் கடமையை தங்குதடையின்றிச் செய்வதற்குமான சூழலை ஏற்படுத்தித் தருமாறும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையோரமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி எனுமிடத்தில் தனியார் காணியிலிருந்த அரச மரக் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் தனது மகளுக்கு வீடொன்றை அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை 23.10.2018 வெட்டியுள்ளார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்திலிருந்து மரக் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியை தன்வசம் வைத்துக் கொண்டு மரக்கிளைகளைக் களையும் வேலையைத் தொடங்கிய சற்று நேரத்தில் அங்கு திடீரென வந்து நின்ற தேரர் மற்றும் பௌத்த மத ஆர்வலர்கள் 'போதி' மரக் கிளைகளை களைவதை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளனர்.  இவ்வேளையில் சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தைக் கேள்வியுற்று உரிய இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் என். வில்லரெட்ணத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தேரர் பிரதேச செயலாளரை பொலிஸார் முன்னிலையில் தாக்குவதற்கு முயற்சி செய்தார் இதையடுத்து பிரதேச செயலாளர் அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேறி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி  யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் நிலமைகளைக் கேட்டறிந்ததுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் தொடர்வு கொண்டு சட்ட நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள் முன்வைத்தனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சம்பவ இடத்தில் இராணுவ சோதனைச் சாவடியும், பின்னர் பொலிஸ் சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வேளையில் அங்கிருந்த தனியார் காணிக்குள் புத்த சிலை நிறுவப்பட்டு அரச மரமும் நாட்டப்பட்டு அங்கு படையினராலும் பொலிஸாராலும் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றுவந்தன.

மேலும், அவ்விடத்தில் ஏற்கெனவே குடியிருந்த குடும்பங்கள் பாதுகாப்புக் காரணமாக பல வருட காலம் தமது குடியிருப்புக்களைக் காலி செய்து விட்டு அகன்று விட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் சமீப சில வருடங்களுக்குள்ளாக அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு முகாமைச் சூழவிருந்த தனியார் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இவ்வேளையிலேயே காணிச் சொந்தக்காரர்கள் காணிகளைச் சுத்தம் செய்து தமது வாழ்விடங்களுக்கு தமது வசதிக் கேற்ப வீடுகளை அமைத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது மேற்படி அரச மரக்கிளை களையப்பட்டதால் முறுகல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages