Breaking

Post Top Ad

Tuesday, October 2, 2018

'எமது பிணக்குகளை நாமே தீர்த்துக் கொள்வோம்' மாணவர்களிடையே மத்தியஸ்த திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 'பிள்ளைகளைப் பாதுகாப்போம் எமது பிணக்குகளை நாமே தீர்த்துக் கொள்வோம்' எனும் தொனிப்பொருளிலமைந்த, மாணவர்களிடையே மத்தியஸ்தத்தை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ.  முஹம்மத் ஆஸாத் தெரிவித்தார்.



மாணவர்களிடையே பரஸ்பரம் எழும் சிறிய பெரிய முரண்பாடுகளை சமரசஞ் செய்து பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வது சம்பந்தமான திட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 30.09.2018 அவர் அறியத் தந்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது. மாவட்டத்தில் 4 பாடசாலைகள் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 36 பாடசாலைகளின் மாணவர்களிடையே இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியும் மட்டக்களப்பு சிவானந்தா தேசியக் கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சிவானந்தாக் கல்லூரியில்  ஒக்ரோபெர் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை பயிற்சிகள் இடம்பெறுகிறது.



தரம் 10, 11, 12 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த ஆண் பெண் மாணவர்கள் 35 பேர்  இந்த மாணவர் மத்தியஸ்த சபைக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

அதேவேளை. 5 ஆசிரியர்களும் இந்த மாணவர் மத்தியஸ்த சபையில் இடம்பெறுவார்கள். மாணவர்களின் விடயங்களுக்கான மேற்பார்வைகளுக்காகவும், உத்தியோகபூர்வ சாட்சிகளுக்காகவுமே ஆசிரியர்கள் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறும் இப்பயிற்சி நெறியில் முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்தம், ஆகிய விடயதானங்கள் இடம்பெறவுள்ளன.

பாடசாலையில் மாணவர்களிடையே எழும் எல்லா வகையான பிணக்குகளையும் பரஸ்பர கலந்துரையாடல் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளும் வகையில் வன்முறைகளுக்குப் பதிலாக மென் முறைகளைக் கையாள மாணவர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாக பல்வேறு சமூகப் பாத்திரங்களை வகிக்கும்போது அவர்கள் வன்முறையற்ற சூழலைத் தவிர்த்து அபிவிருத்திக்கான ஆக்கபூர்வமான ஆற்றல்களைக் கொண்டிருப்பர் என்பதே இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிணக்குகளை மாணவர் மத்தியஸ்த சபைகளைக் கொண்டு தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற கரிசனையின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாணவர்களிடையே எழுகின்ற பிரச்சினைகளை மாணவர்  மத்தியஸ்த சபையால் தீர்க்க வாய்ப்பில்லை என கருதப்பட்டாலேயொழிய உடனடியாக பொலிஸுக்குப் பாரப்படுத்த முடியாது.


அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர் மத்தியஸ்த சபையிலிருந்து இப்பிரச்சினை மேல் நடவடிக்கைக்காக பொலிஸுக்கு பாரப்படுத்தப்படுகிறது எனும் கடிதத்தை முறைப்பாட்டாளர் தரப்பு பொலிஸாருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் மத்தியஸ்த சபை அமைக்கப்பட்டு முறைப்படி அம்மத்தியஸ்த சபை இயங்கத் துவங்கியதும் இந்த அறிவுறுத்தல்கள் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளன.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages