
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் செவனப்பிட்டி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை 28.10.2018 பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சுமார் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிக்கந்தை மற்றும் பொலொன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொருட்கள் ஏற்றிய நிலையில் ஏறாவூரை நோக்கி வந்து கொண்டிருந்த கனரக லொறியொன்றும் பயணிகள் போக்குவரத்து தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் பஸ் மற்றும் லொறியின் முகப்புப் பக்கங்கள் முற்றாக நொருங்கியுள்ளதோடு அதனதன் சாரதிகள் உட்பட பஸ்ஸில் பயணம் செய்தோருமாக மொத்தம் 35 பேர் படுகாயங்களுக்குள்ளானார்கள்.
விபத்து இடம்பெற்றபொழுது வீதியால் சென்றோர் மற்றும் பின்னர் இணைந்து கொண்ட பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் காயம்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வெலிக்கந்தை வைத்தியசாலையிலும் அதி தீவிர சிகிச்சை தேவைப்பட்டோர் பொலொன்னறுவை வைத்தியசாலையிலும் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது அடை மழை பெய்து வருவதால் வீதி வழுக்கக் கூடிய நிலையிலிருப்பதாக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.