Breaking

Post Top Ad

Tuesday, September 11, 2018

கூட்டுறவுச் சங்கங்கள் புதிய போக்கில் சிந்தித்து மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த வேண்டும் - கி.மா .கூ. ஆணையாளர் எம்.சி.எம்.ஷெரிப்

பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் புதிய போக்கில் சிந்தித்து மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த வேண்டும் அதுவே காலத்தின் தேவையாகும் என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான எம்.சி.எம். ஷெரிப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கன்னங்குடாவில்  பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட கிராமிய வங்கியைத் திங்கட்கிழமை 10.09.2018 திறந்து வைத்து அவர் உரையாற்றினார்.


ஈச்சந்தீவு - கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் என். உருத்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாணக் கூட்டுறவு ஆணையாளர், மேலும் உரையாற்றுகையில் ஒரு காலத்தில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் முதன்மை வகித்த கூட்டுறவுச் சங்கங்களின் தேவைகளும் சேவைகளும் காலமாற்றத்தின் காரணமாக மங்கி விட்டன.

ஆயினும் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் கூட்டுறவு என்பதே வெற்றியளிக்கக் கூடியது என்பது நிரூபணமான உண்மையாகும்.

கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளும் மக்களிடத்தில் அதன் தேவைகளும் மங்கி மறைவதற்கு பல்வேறு உள்ளக காரணிகளும் புறக் காரணிகளும் தாக்கம் செலுத்தியுள்ளன.

என்னிடம் வரும் முறைப்பாடுகளில் ஊழல் மோசடிகள் துஷ்பிரயோகங்கள்  சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளே கூடுதலாகக் கிடைக்கின்றன.

இத்தகைய விடயங்களும் கூட்டுறவுச் சேவையில் மக்கள் நம்பிக்கை இழப்பதற்குக் காரணமாகும்.

எனவே, இந்நிலைமைகளை முற்றிலுமாக மாற்றியமைத்து முன்னரைப்போன்று மக்கள் மயப்படுத்தப்பட்டதாக கூட்டுறவுச் சேவையை மேம்படுத்த வேண்டும்.

எல்லாவற்றையும் பழைய போக்கிலே சிந்திக்காமல் சம காலத் தேவையறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து கூட்டுறவுச் சங்கங்கள் அடிமட்ட மக்களுக்குச் சேவை செய்ய முன்வர வேண்டும்., அப்பொழுதுதான் ஏனைய சேவை வழங்குநர்களுக்குப் போட்டியாக கூட்டுறவுச் சங்கங்களாலும் நின்று தாக்குப் பிடிக்க முடியும்.

கூட்டுறவுச் சங்கங்களின் ஒட்டு மொத்த முதலீடு என்பது கிராம மக்களும் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களும்தான். எனவே இந்த இருசாராரையும் கவனத்திற் கொண்டதாகவே கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகள் அமைய வேண்டும். அதன் மூலம்தான் கூட்டுறவுச் சேவைகள் மீண்டும் புத்துயிர் பெற்று விமோசனம் காண முடியும்.

அதேவேளை கூட்டுறவுச் சேவை செயலிழப்பிற்குக் காரணமாக இருக்கும் உள்ளகக் காரணிகளும் புறக் காரணிகளும் களைந்தெறியப்பட வேண்டும்.

மேலும், மேம்படுத்தப்பட்ட கூட்டுறவுச் சேவைக்காக அரசினால் வழங்கப்படும் சலுகைகளையும் மற்றும் கூட்டுறவுச் சங்களுக்கான காணி உரித்துக்களையும் பெற்றுத் தருவதில் நான் முன்னின்று உழைப்பேன்.

இதற்கு கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்கள் சகலரினதும் ஒத்துழைப்புத் தேவை' என்றார்.

இந் நிகழ்வில் கிராமத்தவர்கள் சிலருக்கு சுயதொழில் மேற்கொள்ளும் பொருட்டு  இலகு வங்கிக்கடன்களும் வழங்கி வைக்கப்பட்டன.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages