மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்திலுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டினைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். ஒரு சிறய ஆற்றைக் கடக்கும் அணையொன்றை அமைக்க முடியாது என்பது பெருமைப்படக் கூடிய விடயம் அல்ல என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
ஈரளக்குளம் பிரதேசத்தில் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரன்புல் அணைக்கட்டு ஒவ்வொரு வருடமும் சுமார் 25 இலட்சம் ரூபாய் செலவழித்து மண்அணை அமைக்கப்படுவதும், பின்னர் அது பெருவெள்ளங்களில் அடித்துச் செல்வதும், சேதமுறுவதுமாகவே இருந்தது.
அதனை அப்படியே தொடர்ந்து தற்காலிகமாக அமைக்காமல் நிரந்தர அணையை அமைக்கவே அனைவரும் விரும்பம் காட்டுகின்றார்கள். இதற்காக நாங்கள் பல தடவைகள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் நாட்டின் அசாதாரண நிலை காரணமாக முடியவில்லை.
தற்போது மீண்டும் அந்த அணைக்கட்டினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு கடந்த வருடம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கற்பாறைகள் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் இதனைத் தடுப்பதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீர்ப்பாசனத் திணைக்கத்திற்குள்ளேயே இந்த கிரான்புல் அணைக்கட்டு தொடர்பில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றது. ஒரே ஒருவரைத் தவிர அனைத்து பொறியியலாளர்களும் இந்த அணையை அமைப்பதற்கு முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தை உரிய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு மேலும் கொண்டு வந்துள்ளோம்.
இந்த அணைக்கட்டு தொடர்பில் அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலணியிலும் சமர்ப்பித்துள்ளார்கள். இந்தக் கிரான்புல்சேனை அணைக்கட்டினைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன்.
இதனை நிரந்தரமாக அமைக்கும் பட்சத்தில் இதற்காக வருடந்தோறும் செலவுசெய்யும் பல இலட்சம் ரூபா பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். அத்துடன் இப் பிரதேச வயல் நிலங்கள் ஊடாக விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்று நன்மைகளை அடைய பெறமுடியும். என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.