Breaking

Post Top Ad

Saturday, September 1, 2018

திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் பதாகைகள்

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்”  என பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியினை சூழ தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் நினைவாலயத்தின் புனித தன்மை கெடாதவாறு நடந்து கொள்ளுமாறு கோரி மும்மொழிகளிலும் “புனிதம் காப்போம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபனின் பங்களிப்பில் பதாகைகள் நேற்று முன்தினம் (புதன் கிழமை) இரவு கட்டப்பட்டன.

அவற்றினை நேற்று வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பில் வந்த சிவில் உடை தரித்த இருவர் அப்பதாகைகளை அறுத்துக்கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.


குறித்த சம்பவமானது நல்லூர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன. இருப்பினும் மீண்டும் அப்பகுதியில் புதிதாக மும்மொழிகளில் பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.

இதேவேளை கடந்த 14 ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்களென அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோசமாக வாழ ஆசையில்லையா?”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? ” என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.

இதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அப்பணியில் ஈடுபடமாட்டோமென தெரிவித்தனர்.

ஆகையால் வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி பூரணப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages