Breaking

Post Top Ad

Monday, August 20, 2018

மறுகா கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இருபொழுதில் கூடல் - பேசிப் பறைதல் இலக்கியச் சந்திப்பு, கலந்துரையாடல்.


சமகால படைப்புலகம் பற்றிய சிந்தனைகளை உருவாக்குதலும் படைப்பாளிகளிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பரிமாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் மறுகா கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இருபொழுதில் கூடல் - பேசிப்பறைதல் இலக்கியச் சந்திப்பும் கலந்துரையாடலும் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


படைப்பாளிகள் மத்தியில் இடைவெளியற்றதொரு பெரு வெளியைத் திறந்துவிடுதலென்பது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் எதிர்வரும் ஆகஸ் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.சிறுகதை, நாவல், கவிதை, கலை என தினமும் இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள பேசிப்பறைதல் இலக்கியச் சந்திப்பில், 25ஆம் திகதி சனிக்கிழமை காலை காலை 9.15 மணிக்கு தொடக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடக்கவுரையினை மறுகா கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் பேசிப்பறைதல் நிகழ்வின் ஏற்பாட்டாளருமுhன த.மலர்ச்செல்வன் நிகழ்த்துவார்.

பாரம்பரியக் கூத்து, மெல்லிசைப்பாடல், மக்கள் பாடல்கள்களுடன் நடைபெறவுள்ள இவ் இலக்கியச் சந்திப்பில், முதல்நாள் காலை நடைபெறும் சிறுகதை தொடர்பான அமர்வினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தன் தலைமையேற்கிறார். இவ் அமர்வில், சிறுகதை மாற்றமும் அடையாளப்பிரச்சினையும் என்ற தலைப்பில் எழுத்தாளர் யதார்தன், புதிய தளங்களில் சிறுகதைகள் எனும் தலைப்பில் எழுத்தாளர் அம்பிரிதா ஏஜெம், சமகால சிறுகதைகளின் அரசியல் என்ற தலைப்பில் கவிஞரும் எழுத்தாளருமான அ.ச.பாய்வாவும் உரை நிகழ்த்துகின்றனர்.

மாலை 2.30 மணிக்கு நடைபெறும் நாவல் தொடர்பான அமர்வினை கிழக்குப்பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா தலைமையேற்கிறார். இதில், புனைவு வெளியில் நாவல் - எழுத்தாளர் சாஜித், நாவல் தமிழில் எத்தகையது? - எழுத்தாளர் ஜிப்பிரிஹசன், பிரதிகளின் அரசியலும் கதைமாந்தர்களும்- விமர்சகர் சி.ரமேஸ், சமகால மலையக இலக்கியம்- இலக்கியச் செயற்பாட்டாளர் சுதர்மமகாராஜன் ஆகியோர் உரையாற்றுவர்.

அன்றைய தினம் மாலை 7 மணிக்கு கோவில் குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைகுந்தம், சுபத்திரை கல்யாணம் ஆகிய கூத்து ஆற்றுகைகள் நடைபெறவுள்ளன.

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் கவிதை அமர்விற்கு அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் றியாஸ் குரானா தலைமையேற்கிறார். இதில், கவிதையும் புரிதலும் - கவிஞர் வாசுதேவன், மாற்றுக் கவிதைகள் அல்லது புதிய கவிதைகள்- கவிஞரும் படைப்பாளியுமான கருணாகரன், கவிதைகளின் புதிய வழி - கவிஞர் கிரிசாந், திரைமொழி - கல்குடா மீனவர்கள் - எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான ஹசின் ஆகியோர் உரையாற்றுவர்.

கலை என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு நடைபெறும் இறுதி அமர்வினை எழுத்தாளரும் கவிஞருமான வெ.தவராஜா (ராசாத்தி) தலைமையேற்கிறார். இவ் அமர்வில் மக்கள் கலையாகக் கூத்து - கலைச் செயற்பாட்டாளர் து.கௌரீஸ்வரன், புலம்பெயர் நாடுகளின் மக்கள் கலை - கலைச் செயற்பாட்டாளர் களப்பூர் தங்கா, இயங்குநிலைக் கலைகளின் செயற்பாடுகளும் சவால்களும் - கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் எஸ்.சந்திரகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

கலந்துரையாடல்கள், கருத்துப்பகிர்வுகள், விமர்சனங்களுடன் மட்டக்களப்பு மறுகா கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இருபொழுதில் கூடல் - பேசிப்பறைதல் இலக்கியச் சந்திப்புக்கு ஆர்வமுள்ள அனைத்து படைப்பாளிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வாசகர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages