கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இந்நிலையில், இன்று மேல்நீதிமன்ற நீதிபதி விடுமுறை காரணமாகவும் அரச சட்டத்தரணி மற்றும் சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுள்ளது.
இதன் போதே வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.