Breaking

Post Top Ad

Wednesday, August 15, 2018

தமிழ்-முஸ்லிம் என்ற பேதம் வளர்க்கும் வகையில் பிரதேச சபையில் எந்தத் தீர்மானமும் எடுப்பதில்லை


தமிழ்-முஸ்லிம் என்ற பேதம் வளர்க்கும் வகையில் நானோ அல்லது எனது தலைமையிலான பிரதேச சபை நிருவாகமோ எந்தத் தீர்மானமும் எடுப்பதில்லை என கோறளைப்பற்று பிரதேச சபைத் தலைவர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபையினதும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவினதும்  நிருவாகத்திற்குட்பட்ட  பொண்டுகள்சேனை நீரோடையை கோறளைப்பற்று பிரதேச சபை புனித கங்கையாகக் கருதி கடந்த வாரம் அறிவித்தல் பலகை நாட்டியுள்ளது.


இதனால் கடந்த ஒரு சில நாட்களாக இது பற்றிய சர்ச்சை குறித்து கண்டனங்களும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன.

இதுகுறித்து பிரதேச சபைத் தலைவர் புதன்கிழமை 15.08.2018 ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.


இந்த விவகாரம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், பொண்டுகள்சேனை நீரோடையை புனித கங்கையாகப் பிரகடனப்படுத்தியமையை தான் வன்மையாகக் கண்டிப்பதாக கோறளைப்பற்று பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம்.ஐ.எம். இம்தியாஸ் ஊடகங்கள் மூலமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் பிரதேசத்தில் இன ரீதியான விரிசலுக்கும் வித்திடலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சபை அமர்வுகளில் பிரேரணையோ தீர்மானமோ மேற்கொள்ளப்படாமல் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு புனித பூமியாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் விமர்சித்துள்ளார்.

ஆனால், அவரது இந்தக் கண்டனமும் விமர்சனமும் அபத்தமானது, ஏனெனில், இது என்னால் தனிப்பட்ட முறையிலோ அல்லது எதுவித முன்னறிவித்தலுமில்லாது பிரேரணையின்றியும் சபைத் தீர்மானமின்றியும் ஒரு போதும் பிரகடப்படுத்தப்படவில்லை.

கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோராவெளி, பிரதேச மக்கள், பெரிய கோயில் நிருவாகம் மற்றும் பிரதேச செயலகத்தில்  முன் வைக்கப்பட்ட வேண்டுகோள் என்பனவற்றுக்கமைவாக பிரதேச  சபை உறுப்பினர் காளிக்குட்டி நடராஜா கடந்த ஏப்ரல் மாதம் இதனைப் பிரேரணையாக முன்வைத்ததன் அடிப்படையில் அதை சபை மே மாதம்  தீர்மானமாக நிறைவேற்றியது.

அதன் பிரகாரமே குறிப்பிட்ட உறுப்பினர் அந்த அறிவித்தல் பலகையை கடந்தவாரம் குறிப்பிட்ட அந்த நீரோடைப் பிரதேசத்தில் நாட்டியுள்ளார்.

அந்த பிரகடனத்தின்படி குறிப்பிட்ட நீரோடைப் பகுதியில் பொழுது  போக்கிற்காக வருபவர்கள், குறிப்பிட்ட பகுதியில் வைத்து வைத்து மதுபானம் பாவித்தல், மாமிசங்களைக் கொண்டு வந்து அதன் எச்சங்களை நீரோடையிலும் அதன் சுற்றுப்பறங்களிலும் வீசுதல், நீரோடையில் மாமிச இரத்தங்களைக் கழுவுதல், அந்தப் பிரதேசத்தில் குளித்தல், நீரில் மூழ்கிக் குளித்தல் என்பனவும்  தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நீரோடையிலிருந்து பெறப்படுகின்ற நீரே சுத்திகரிக்கப்பட்டு திகிலிவெட்டை கிராம மக்களுக்கு குடி நீராக வழங்கப்படுகிறது.

அந்த மக்களும் இந்த நீரோடையில் மாமிச எச்சங்கள் கலந்துள்ளதாக எமது கரிசனைக்குக் கொண்டுவந்திருந்தனர்.

மேலும், அந்த நீரோடையில் நீர் திடீரென அதிகரிப்பதால் அங்கு நீராடுபவர்கள் மூழ்கித் தத்தளிக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.

இவ்வாறு பல நிலைமைகளைக் கருத்திற்கொண்டே சபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5ஆம் மாதம் எடுக்கப்பட்ட முடிவின்படி 8ஆம் மாதமே அறிவித்தல் பலகை இடப்பட்டது.

ஆகவே. இது தமிழ் - முஸ்லிம் என்ற இன அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட உறுப்பினர் இந்த விடயம் இனப்பாகுபாடானது அல்ல என்பது பற்றியும் இது பிரதேச சபைத் தலைவரினது தனித் தீர்மானமோ அல்லது சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்படாது முடிவெடுக்கப்பட்ட விடயமோ அல்ல என்பது பற்றியும் தெளிவு பெறவேண்டும்.

தமிழரோ முஸ்லிமோ அல்லது வேறு எந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இரந்தாலும் சுற்றுச்சூழலை தூய்மை மாறாது பேணிப் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் இது அனைத்து சமூகத்தவர்களுக்கும் நன்மையான விடயமே அன்றி இன அடிப்படையில் தீமை விளைவிக்கக் கூடியதல்ல' என்றும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages