அனுராதபுரத்திலுள்ள அமைச்சரின் அமைச்சு வாஸஸ்தலத்தில் அமைச்சரைச் சந்தித்த உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் தலைமையில் சென்ற விவசாயிகள் குழுவினர் தாம் தற்சமயம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த மகஜரையும் அமைச்சரிடம் கையளித்தனர்.
அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமது பிரதேச விவசாயிகளுக்கான எந்தவிதமான வேலைத் திட்டத்தையும் கடந்த மே மாதம் 25ஆம் திகதியிலிருந்து நீர்ப்பாசன அதிகாரிகள் செய்து தரவில்லை.
உன்னிச்சைக்குள வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளின் மனக்குமுறல்களை அறிந்து சிபார்சுகளைச் செய்வதற்காக அமைச்சு மட்டத்திலிருந்து சுயாதீன குழுவொன்றை அனுப்ப அமைச்சர் கடந்த மாதம் இணங்கியிருந்தும் அக்குழு இன்னமும் களத்துக்கு வரவில்லை.
மேலும் உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்டத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளரின் சேவையில் பிரதேச விவசாயிகள் திருப்திப்படாததால் அவரை இடமாற்றம் செய்து விவசாயிகளின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் உள்ள புதிய அதிகாரியை நியமிக்குமாறு கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சனிக்கிழமை 04.08.2018 தனது குழுவினருடன் தான் நேரடியாக உன்னிச்சைக்குளப் பிரதேசத்திற்கு வருகை தந்து விவசாயிகளின் நிலைமைகளை ஆராயவுள்ளதாக வாக்குறுதியளித்தார்.
கடந்த மே மாதம் 24ஆம் திகதி உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் சடுதியாகத் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசனக் குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்திருந்தன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் மடை திறக்கப்பட்டதனால் அக்குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாலேயே விவசாயிகள் நிர்க்கதிக்கு உள்ளானார்கள்.
எனினும் இது குறித்து நீர்ப்பாசனத்தின் திணைக்களம், மாவட்ட நிருவாக அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் ஆகியோரிடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி முரண்பாடுகளைச் சரிசெய்து அக்கபூர்வமான செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல எடுத்த நடவடிக்கைகளுக்கு சாதமான விளைவுகள் இதுவரை ஏற்படவில்லை உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.