கிழக்குப் பல்கலைக்கழக நூலக வலையமைப்பின் புதியதோர் மைல்கல்லாக, இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்களின் வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச ஆய்வு மாநாடொன்று, மட்டக்களப்பு - ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நாளையும் (09) நாளை மறுநாள் (10) நடைபெறவுள்ளது.
கல்வி மற்றும் நூலகத் தகவல் விஞ்ஞானத் துறைகளில் வீரியம் பெற்றுவரும் பல்வேறு அபிவிருத்திப்போக்குகள் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.
இம்மாநாட்டில் அவுஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்களும், துறைசார் விற்பன்னர்களும் தத்தமது புலமைசார் படைப்புகளை, விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதுடன், சமகாலச் சவால்களை எவ்வாறு ஆரோக்கியமாக மேற்கொள்ளமுடியுமென்பது பற்றியும் நூலகத்துறையை மீள் பொறியியலாக்கும் நுட்பமுறைபற்றியும் ஓர் அறிவுசார் குழுநிலை விவாதமும் நடைபெறவுள்ளது.
இச்சர்வதேச மாநாட்டின் கருப்பொருள் மைய உரைகளை, இலங்கை கொழும்பு பல்கலைக்கழக நூலகர் டொக்டர் பிரதீபா விஜயதுங்க, இலங்கை திறந்த பல்கலைக்கழக நூலகர் டொக்டர் வத்மானெல் செனவிரெட்ண ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
பிரதம அதிதியாக இலங்கை களனிப் பல்கலைக்கழக நூலக விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் டொக்டர் டபிளியு.ஏ.வீரசூரிய கலந்துகொள்ளவுள்ளார்.
இம்மாநாட்டின் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக பதில் நூலகர் தீசன் ஜெயராஜ், இணைச் செயலாளர்களாக சிரேஷ்ட உதவி நூலகர்களான எஸ்.சாந்தரூபன், எம்.என் ரவிக்குமார், இயங்குநிலைக்குழு அங்கத்தவர்கள், நூலக சேவைகள் உதவிப் பதிவாளர் ஆகியோர், மாநாட்டுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.