Breaking

Post Top Ad

Sunday, July 15, 2018

கச்சான் காற்றினால் மரங்கள் முறிவு, தூசுப் படலம் வாரியிறைப்பு, வறட்சி அதிகரிப்பு

தற்போது கிழக்கு மாகாணத்தில் பலமாக வீசத் தொடங்கியிருக்கும் கச்சான் காற்றினால் (தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று) அதிக அசௌகரியங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.

பொதுவாக கச்சான் காற்று என்று கிழக்கு மாகாணத்தவர்களால் அழைக்கப்படும் வரண்ட பலமான காற்று கடந்த வார பிற்பகுதியிலிருந்து வீசத் துவங்கியுள்ளது.

ஆகக் கூடியது சுமார் 3 மாதங்களுக்கு கிழக்கில் வீசக் கூடிய இக்காற்று தென்மேற்கு மலைச்சரிவுகளில் மழையைப் பொழிந்து விட்டு கிழக்கு நோக்கி பலமான வரள் காற்றாக பெயர்ந்து வருகிறது.


இந்நிலையில் அதிகரித்த வேகத்துடன் வீசும் காற்றினால் உஷ்ணம் நிலவுவதோடு சிற்சில இடங்களில் சூறைக்காற்றாகவும் பெயர்கிறது.

இதனால் தகரக் கொட்டில்கள், கூரை ஓடுகள், சிறிய பெரிய மரங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு வீசப்படுகின்றன.

சில இடங்களில் மின் கம்பங்களிலும் மரங்கள் வீழ்கின்றன.

வெள்ளிக்கிழமை 13.07.2018 செங்கலடி பதுளை வீதியை அண்டிய பகுதியில் மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளிலும், தூண்களிலும் மரங்கள் சரிந்து வீழ்ந்ததினால் மின் தடைப்பட்டது.

இதேவேளை கரைகளில் நிறுத்தி வைக்கப்படும் தமது தோணிகள், வள்ளங்கள் என்பன குளத்திலும், வாவியிலும், கடலிலும் அடித்துச் செல்லப்படுவதாகவும், மீன் பிடிப்பதற்காக கடலிலும் வாயிலும் குளத்திலும் இடப்படும் வலைகள்  முறுக்குப்பட்டு சிக்கிக் கொள்வதாகவும் இதனால் தமது மீன் பிடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், புழுதியை வாரியிறைத்து வீசும் கச்சான் காற்றினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் அதிக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages