Breaking

Post Top Ad

Wednesday, July 25, 2018

யாழ்.கோட்டையில் இராணுவத்தினர் இருக்க முடியாது!

யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியமில்லை என வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.


இதன் போது, கேள்வியெழுப்பிய சிவாஜிலிங்கம்,
யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம் தற்போது கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்று வினவினார்.

இதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த தொல்லியல் திணைக்கள அதிகாரி கோட்டையின் ராணி மாளிகை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த மாளிகைக்கு அருகில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.

அங்கு இருந்த அந்த முகாமில் ஏற்கனவே இராணுவம் இருந்ததால் அவர்கள் வேறு இடத்திற்கு மாறி அங்கு தங்குவதற்கான தற்காலிக முகாமையே தற்போது அமைத்து வருகின்றனர் என்று பதில் வழங்கினார்.
தொல்லியல்துறை அதிகாரியின் பதிலுக்கு எதிர் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம்,

கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது. புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அங்கு இராணுவம் இருப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி கொடுத்து வருகிறது. ஆனால் அங்கு இராணுவம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகையினால் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில் இராணுவத்தினருக்கு இடம் கொடுப்பதானது ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததாகவே அமையுமென்றும் என்றார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages