கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு 1000 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் புதன்கிழமை 18.07.2017 நடைபெற்றது.
இதன்போதே வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க(வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசெப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிட்டு 2008- இல் முதலமைச்சராகத் தெரிவாகி 2012 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.