மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை கூட பறித்து மத்திக்கு கொடுப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“சட்டம் ஒழுங்கு வடக்கில் சீர்குழைந்து உள்ளது என கூறுபவர்கள், சட்டம் ஒழுங்கை நிறைவேற்றும் அதிகாரத்தை வடக்குக்கு கொடுக்க வேண்டும் என குரல் கொடுக்கவில்லை. மாறாக. வடமாகாண முதலமைச்சர் மீது குறைகண்டுபிடிப்பதையே, இலக்காக கொண்டு சிலர் செயற்பட்டு வருகின்றார்கள்.
“நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் யாழில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் விழிப்புக்குழு அமைத்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் முயற்சிக்கவில்லை. அதனை கவனமாக தவிர்த்துள்ளார்.
“அவர், நேர்மையானவர் எனில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதற்கான அதிகாரத்தை மாகாணத்துக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“அதை விடுத்து, மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை கூட பறித்து மத்திக்கு கொடுக்க முயல்கின்றார்கள். முதலமைச்சருக்கு அமைச்சர்களை நீக்கும் அதிகாரமில்லை என வழக்கு தாக்கல் செய்தவரும் அவருக்கு பின்னால் இருந்து நெறிப்படுத்தியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.