Breaking

Post Top Ad

Tuesday, June 5, 2018

குடிநீர் போத்தல் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமரை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பதுளை-செங்கலடி வீதியினை மறித்து மக்கள் மேற்கொண்ட குறித்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையினை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கான எந்த அனுமதியும் உரிய முறையில் பெறாமலும் பிரதேச மக்களின் கருத்துகள் பெறப்படாமலும் இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இயற்கை வளம் மிக்க பகுதிகளில் இவ்வாறான தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது இயற்கை வளத்தினை பாதிக்கும் எனவும் இதனை உடனடியாக இடைநிறுத்தவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கட்டடம் அமைப்பதற்கு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் சபையின் அனுமதி பெறப்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஒருவரே இந்த தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் தமது பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எஸ்.வியாளேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளார் என்.வில்வரெட்னம் ,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் நா.கதிரவேல் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் பிரதேசசபையின் தவிசாளர் பேரின்பம் மற்றும் பிரதேசசபை தவிசாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பாக பொலிஸாரினால் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதன்போது குறித்த கட்டட நிர்மாணப்பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக உடனடியாக அவற்றினை நிறுத்துமாறு பிரதேசசபையின் தவிசாளர் பணிப்புரை விடுத்ததற்கு அமைவாக கட்டட நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

(Photo : Nilaa)







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages