Breaking

Post Top Ad

Thursday, June 14, 2018

கிரான்புல்சேனை அணைக்கட்டு விவசாயிகளுக்கு பிரதானம் - விரைவில் கல் அணையை அமைச்சர் அமைக்க வேண்டும்! - ஸ்ரீநேசன் எம்.பி

(மோகன்)
கிரான்புல்சேனை அணைக்கட்டு என்பது விவசாயிகளின் மிக முக்கியமான மூலோபாயத் திட்டமாக இருப்பதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விளையாட்டாக எண்ணாமல் அமைச்சரும், அதிகாரிகளும் நேர்கணியமாகச் சிந்தித்து மிக விரைவாக அடிக்கல் நாட்டப்பட்ட இதற்கான நிரந்தர கல் அணையை அமைத்து விவசாயிகளின் நீண்ட கால அபிலாசையை நிறைவேற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.


இன்றைய தினம்கிரான்,  கிரான்புல்சேனை அணைக்கட்டு தொடர்பில் மேற்கொண்ட களவிஜயத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடைப்பெடுத்த கிரான்புல்சேனை அணைக்கட்டினை உடனடியாக மீள அமைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு அக்கூட்டத்தில் இருந்த அரசியற் பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவரும் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல் ஏகமனதான விருப்பினைத் தெரிவித்தார்கள்.

புதன்கிழமை இதற்குரிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து இந்த அணையைக் கட்டி விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவையை நிறைவேற்றுவதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா என்பதை அறிவதற்காக இன்று நாங்கள் களவிஜயமொன்றை மேற்கொண்டோம். இங்கு வந்து பார்த்த போது இங்கு வேலைகள் எதவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக இதற்குப் பொறுப்பான பொறியியலாளர் பார்த்தசாரதி மற்றும் பிரதிப் பணிப்பாளர் அசார் அவர்களிடமும் தொடர்பு கொண்டு விவாதித்த போது இதனை இப்போதே உடனடியாகத் தொடங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கின்றார்கள்.

இவ் உத்தரவாதம் கடந்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் போன்று இல்லாமல் உண்மையில் செய்ய வேண்டும் என்ற மனதோடு சொல்லியிருக்கின்றார்கள் என்றே நம்புகின்றேன்.

இதனை மேற்கொள்கின்ற போது ஏற்கனவே இருக்கின்ற நீர்வரும் வழிகளைத் தடை செய்யாமல் இந்த அணைக்கட்டினைக் கட்டிக் கொடுக்க வேண்டியது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இவ் அணைக்கட்டு விடயத்தில் எவ்விதமான ஒரு அதிகார ரீதியான எண்ணப்போக்கு அல்லது உளவியல் சார்ந்த விடயங்கள் என்பவற்றை விட்டுவிட்டு விவசாயிகளின் நலன்கள், அவர்களின் பொருளாதாரம், இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயற்பட்டு இதனை உடனடியாக நிறைவேற்றி வைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இந்த இடத்தில் உத்தரவாதம் தந்தவர்கள் இவ்விடயத்தை மிக விரைவில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு எவரும் தடையாக இருக்கக் கூடாது. இவ்விடயம் ஒரு சுமூகமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனறே நாங்கள் எண்ணுகின்றோம். இது மேலும் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால் இதனை மேல் மட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே இவ்விடயம் ஆரோக்கியமான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

இவ்விடயம் அவ்வாறு மேற்கொள்ளப்படும் என்று விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்களும் நம்புகின்றோம். எனவே இப்போதே இந்த வேலைப்பாடு தொடங்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

இந்தக் கிரான்புல் அணைக்கட்டு என்பது விவசாயிகளின் மிக முக்கியமான மூலோபாயத் திட்டமாக இருப்பதனால் இதனை மேலும் இழுத்தடித்துக் கொண்டு செல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விளையாட்டாக எண்ணாமல் அமைச்சரும், அதிகாரிகளும் நேர்கணியமாகச் சிந்தித்து மிக விரைவாக அடிக்கல் நாட்டப்பட்ட இதற்கான நிரந்தர கல் அணையை அமைத்து விவசாயிகளின் நீண்ட கால அபிலாசையை நிறைவேற்ற வேண்டும்.

அதிகாரிகள் விவசாயிகளின் நலன்களுக்காகவே நியமிக்கப்பட்டவர்கள். எனவே விவசாயிகள் சார்ந்த விடயத்தில் எவ்வளவு தூரம் இறங்கிச் செயற்பட வேண்டுமோ அந்தளவு இறங்கிச் செயற்பட வேண்டும். இல்லவிடில் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் எற்படுகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும். ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் 03வது இடத்தில் இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு எமது அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் எங்களுக்கு அவசியமாக இருக்கின்றது. எனவே அதிகாரிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages