Breaking

Post Top Ad

Wednesday, June 6, 2018

தாயகத்தைக் கூறுபோட நினைக்கின்ற கட்சிகளுடன் ஒன்று சேர முடியாது...

வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிககின்ற கட்சிகள் ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால் பாரிய பிரச்சனைகள் உருவாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கிளைத் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் காரியாலய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் மௌனிக்கப்பட்ட இந்த 09 வருட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கு இங்கு பல்வேறு சக்திகள் ஊடுருவியிருக்கின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாத அரசியல் செய்வதற்காக பல்வேறு பெரிய கட்சிகள் முதலீடாகப் பணத்தைக் கொடுத்து சிறு சிறு கட்சிகளைத் தோற்றுவிக்கும் செயற்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.


எங்களிடம் சிலர் வந்தார்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று. அந்தக் கோரிக்கை சரியானது நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதில் உள்ள சிக்கல்களை மீட்டுப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வடகிழக்கு இணைந்த தாயகத்தினை அடிப்படையாகக் கொண்ட கட்சி. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வரையரை செய்யப்பட்ட அதுவும் சில மாவட்டங்களுக்குள் மட்டும் வரையரை செய்யப்படுகின்ற கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைவதாக இருந்தால் அதற்கான சரியான உடன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலிலே கொள்கை ரீதியாகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அங்கீகரிக்கின்ற கட்சிகள், வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிககின்ற கட்சிகள் ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால் பாரிய பிரச்சனைகள் உருவாகும்.

இதே பிரச்சனைதான் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் இடம்பெற்றது. வடகிழக்குத் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள் பலர் வந்தார்கள். இதில் மக்கள் தெளிவு கொள்ள வேண்டும். முதலில் கொள்கை சரியாக இருக்க வேண்டும். கொள்கை மாறுபடுமாக இருந்தால் அரசியல் பயணம் என்பது மாறுபடும்.

கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தற்போதே சிந்திக்கத் தொடங்க வேண்டும். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் தாங்களே பிரிந்து ஆசனங்களை எடுத்த போதுதான் அந்தச் சிக்கல் ஏற்பட்டது. அந்த நிலை கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் இருந்தால் அங்கும் உள்ளுராட்சி போன்ற நிலைதான் ஏற்படும் என்பதை தலைமை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சி பார்க்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எங்களோடு இருக்கின்ற பங்காளிக்கட்சியொன்று அதனை ஏற்கவில்லை. எனவே பங்காளிக் கட்சிகள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்பு அடிப்படையில் செயற்படவோமாக இருந்தால் நிச்சயாக கிழக்கு மாகாணத்தை நாங்கள் கைப்பற்ற் கூடிய வாய்ப்பு இருக்கும்.

உள்ளுராட்சி மன்றங்களில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு இந்தத் தேர்தல் முறைதான் காரணம். விகிதாசார முறையில் தேர்தல் இடம்பெற்றிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது சபைகளையும் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages