Breaking

Post Top Ad

Thursday, June 7, 2018

வழிதவறிச் சென்றவன் மீண்டு சரியான வழிக்கு வந்துள்ளேன் - இரா.சாணக்கியன்

நான் பேரினவாதக் கட்சியொன்றின் அமைப்பாளராகவும், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளேன். எமது சகோதர இன பிரதிநிதிகள் செய்கின்ற உதவிகளில் ஒரு வீத உதவிகளைக் கூட எம்மால் செய்யமுடியவில்லை. ஏதேனும் உதவிகளுக்காக ஒரு சகோதர இன பிரதிநிதியை நாட வேண்டும் என்றால் நான் அந்தக்கட்சியில் அமைப்பாளராக இருந்து எவ்வித பிரயோசனமும் இல்லை. அதனாலேயே அங்கிருந்து விலகினேன். வழி தவறிச் சென்ற நான் மீண்டு வந்துள்ளேன் என இராசமாணிக்கம் அறக்கட்டளை அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


கடந்த செவ்வாய்க்கிழமை வெல்லாவெளியில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேரினவாதக் கட்சியொன்றின் அமைப்பாளராக இருந்த நான் பேரினவாதக் கட்சிகளாக இருந்தாலும் சரி, தேசியக்கட்சிகளாக இருந்தாலும் சரி நானும் அவ்வாறான கட்சி ஒன்றின் அமைப்பாளராகவே இருந்து வந்தேன். அவ்வழி தவறு என உணர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி தற்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்துள்ளேன்.

பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி அவை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தன. ஆனால் அண்மையில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அவர்கள் தெரிவித்திருந்தார் படிக்க வேண்டுமாக இருந்தால் மரத்திற்குக் கீழ் இருந்தும் படிக்கலாம் என்று. எமது பிரதேசத்தில் அக்கட்சியின் அமைப்பாளராகவும் கல்வி அமைச்சின் ஒரு முக்கிய புள்ளியாகவும் இருப்பவர் இக்கருத்திற்கு என்ன சொல்லப் போகின்றார். அவர்கள் உள்ளுராட்சித் தேர்தலில் போது கூறிய வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

அதே நேரத்தில் நான் அமைப்பாளராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வீதிக்கு ஒரு அமைப்பாளரை நியமித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி அவர்களும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு ஒரு இணைப்பாளரையும் தெரிவு செய்திருக்கிறார். அவர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நான் ஐந்து வருடங்கள் அக்கட்சியின் அமைப்பாளராகவும், இந்த போராதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இருந்திருக்கின்றேன் ஆனால் இதுவரை அபிவிருத்திக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. எமது சகோதர இன பிரதிநிதிகள் செய்கின்ற உதவிகளில் ஒரு வீத உதவிகளைக் கூட எம்மால் செய்யமுடியவில்லை.

நான் ஒரு அமைப்பாளராக இருந்து உதவிகளை கோரினால் எமது மாவட்டத்திலுள்ள அமைச்சரிடம் இருந்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் 75 வீதமானவர்களாக நாங்கள் இருந்து கொண்டு ஏதேனும் உதவிகளுக்காக ஒரு சகோதர இன பிரதிநிதியை நாட வேண்டும் என்றால் நான் அந்தக்கட்சியில் இருந்து எவ்வித பிரயோசனமும் இல்லை. அதனாலேயே அங்கிருந்து விலகினேன்.

தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்றேன். நாம் மாகாணசபைத் தேர்தலுக்கு மிக விரைவாக ஆயத்தமாக வேண்டும். ஏனெனில் பல கட்சிகள் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பலவாறு ஆயத்தமாகின்றது. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சத்ய என்று ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள். அது மத்திய வங்கி கொள்ளையை மறைப்பதற்கான அமைப்பாக இருந்தாலும் மாகாணசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற அமைப்பாகவே இருக்கின்றது.

நான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்தமைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றது. நான் தேர்தலுக்காகத் தான் தமிழரசுக் கட்சியில் இணைந்ததாகக் கூறுகின்றார்கள். எனக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கின்றது அரசியலில் நுழைவதற்கு அத்தோடு எனக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கட்சியால் முடிவெடுத்து இப்பிரதேசத்திற்கு எவரைக் களமிறங்குகின்றார்களோ அவரை ஆதரித்து நாங்கள் வேலை செய்வோம். அந்தவகையில் எதிர்காத்தில் கட்சியில் இருக்கும் நாங்கள் அனைவரும் சேர்;ந்து வெலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages