கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றித்திரியும் தரகர்களை தண்டிப்பதற்கு வழி செய்யும் வகையிலான சட்டமூலமொன்று நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தரகர்கள் விமானப் பயணிகளின் உறவினர்கள் போன்று நடித்து அவர்களை ஏமாற்றி உடைமைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் செல்லும் நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்று வருகின்றது.
அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக உழைத்து விட்டுத் திரும்பி வரும் கிராமப்புற அப்பாவிப் பெண்களே இவ்வாறான தரகர்களினால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம் ஏமாற்று, மோசடி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படும் தரகர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் அல்லது பத்து மாத சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும் பட்சத்தில் மேற்குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் விதிப்பதற்கான ஏற்பாடுகளும் சட்டமூலத்தில் இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.