கழிவுகளை உரிய முறையில் அகற்றாமையால் சூழல் மாசடைதல், டெங்கு மற்றும் தொற்று நோய்களுக்கு உள்ளாகுவதுடன், புற்றுநோய்கள் மற்றும் சுவாச நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன என, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி நேற்று (14) தெரிவித்தார்.
அத்தோடு, கழிவுகளை விலங்குகளும் பறவைகளும் உட்கொள்வதால், பல பாதிப்புகளுக்கும் உட்பட்டு, அவை இறக்கும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“கழிவுச் செயற்பாட்டை ஒழுங்கமைப்பதன் மூலம், பசுமையான சூழலைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளிலான திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் பிரசார நடவடிக்கையும், அக்கரைப்பற்று மாநகர சபையால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர சபையின் ஆணையாளர், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர், பொலிஸ், இராணுவப் பிரிவினர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடன், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.