Breaking

Post Top Ad

Saturday, May 26, 2018

பல ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்! ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் பணிப்பாளர் நாயகம் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை உள்ளடக்கிய தென்மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8.00 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில், தென்மேற்கு பகுதிகளில் பருவமழை குறைந்து காணப்பட்ட போதிலும், சில பகுதிகளில் அடைமழை பெய்ததாக அவர் கூறியுள்ளார்.
இரத்தினபுரி மற்றும் ஹிந்தாவ பகுதிகளில் நேற்று அதிக அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வெள்ளம் மற்றும் அடுத்தடுத்து வரும் நிலச்சரிவு அச்சுறுத்தல்கள் உள்ள தாழ்ந்த இடங்களில் வாழும் மக்களை வெளியேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயா உள்ளிட்ட நான்கு முக்கிய ஆறுகள் பெருக்கெடுக்கும் ஆபத்தை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன பொறியியல் பணிப்பாளர், மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.

கேகாலை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவுகள் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி திணைக்கள அதிகாரி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages