எரிபொருட்களுக்கு விதிக்கும் வரியைக் குறைக்காமல் அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமை அநீதியானது என ஜே.வி.பி குற்றஞ்சாட்டியது.
பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு அரசாங்கம் 45 ரூபா வரியை அறவிடுகிறது. டீசல் லீற்றர் ஒன்றுக்கு 24 வீதம் வரி அறவிடப்படுகிறது. இவ்வாறு அறவிடப்படும் வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலத்தை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருப்பதால் சகலவற்றுக்குமான விலை அதிகரிக்கப்படவுள்ளது. முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதியின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது, உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது என்ற காரணங்களைக் காண்பித்தே எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
எனினும், எரிபொருட்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அதிக வரி குறித்து எதுவும் கூறுவதில்லை. பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 45 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை 35 ரூபாவாகக் குறைப்பதால் திறைசேரி ஒன்றும் நஷ்டம் அடைந்துவிடப்போவதில்லை. மக்கள் ஏற்கனவே பல்வேறு வரிச் சுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிபொருட்களுக்கு விதிக்கும் வரிகளைக் குறைத்து தற்காலிகமாக மக்களுக்கு நிவாரணமொன்றை வழங்குவதற்கு அரசாங்கத்தால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
மறுபக்கத்தில் அரசாங்கம் அரசியலமைப்பையும் மீறி கூடுதலான அமைச்சர்களைக் கொண்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய செலவுகளைக் குறைக்காமல் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி வருகிறது என்றும் பிமல் ரத்நாயக்க மேலும் குற்றஞ்சாட்டினார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.