Breaking

Post Top Ad

Saturday, May 12, 2018

உயிர் நலன் காக்கும் தியாகப் பணி

சர்வதேச தாதியர் தினம் இன்று உலகெங்கும் அனுஷ்டிப்பு

மருத்துவர்களின் வலது கையாகவும், நோயாளிகளுக்கு அன்பானவராகவும் பல கோணங்களில் தாதியர் அணுகப்படுகின்றனர். தாதிமை தொழில் உயர்வாகவே கருதப்படுகிறது, போற்றப்படுகிறது. பொறுமையும், சகிப்புத் தன்மையும் இப்பணியின் இருகண்கள். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.

செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது.

1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும்.

மறுபுறமாக தாதியர்தினம் என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஓகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.

தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். விளக்கேந்திய சீமாட்டி, கை விளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார். பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள்.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார்.

1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் பரவலாகத் தாதியர் சேவை புரிந்தார். அதீத களைப்பு ஏற்படல் (Chronic Fatigue Sydnrome) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது.

எனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.

தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூரும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது.

அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலைஆட்களாகவும் உயர் குடும்பங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் தற்போது, பல்வேறு பணி சுமைகளுக்கும் பல சவால்களுக்கும் இடையே தாதியர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். அர்பணிப்பின் அர்த்தத்தை விளக்கும் தாதியர் பொறுமையின் சின்னமாகவும் கருதப்படுகின்றனர்.

மருத்துவர்களின் வலது கையாகவும், நோயாளிகளுக்கு அன்பானவராகவும் பல கோணங்களில் தாதியர் அணுகப்படுகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பொறுப்பற்ற தரப்புக்களின் கொடூர முகத்திரைகள் அவ்வப்போது கிழித்தெறியப் பட்டாலும், ஒட்டு மொத்தமாக தாதிமை தொழில் உயர்வாகவே கருதப்படுகிறது, போற்றப்படுகிறது.

இத்தினத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதி உயர் அங்கீகாரமாகும். தொடரட்டும் உங்கள் சேவை.

ஆர். நடராஜன்No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages