Breaking

Post Top Ad

Wednesday, May 30, 2018

மட்டக்களப்பில் விவசாயிகள் - நீர்ப்பாசன திணைக்களத்தினர் எதிர் எதிரான ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்ட விவசாயிகள்  இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினர்.


இதேவேளை நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் தாக்குதலாளி தொடர்பில் முறையான விசாரணையினை வலிறுத்தியும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய உன்னிச்சை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாவிக்கரை வீதியில் ஆரம்பமான விவசாயிகளின் கவனயீர்ப்பு பேரணி அந்தோனியார் ஆலய வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தது.


குறித்த நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிரான பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன், தமக்கான நிவாரணங்களை உரியவர்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

கடந்த 24ஆம் திகதி உன்னிச்சைக்குளம் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசன குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. உன்னிச்சைக் குளத்தினை சிறந்த முறையில் நீர்ப்பாசன திணைக்களம் முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலேயே இந்த நஷ்டம் ஏற்பட்டதாக இங்கு விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் கடந்த 24ஆம் திகதி திறந்து விடப்பட்டன.

இதனால் சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தாம் பாதிக்கப்பட்டதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.





 இதேநேரம்,  
அகில இலங்கை நீர்பாசன திணைக்கள ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர்பாசன திணைக்களஉத்தியோகத்தர்கள், ஊழியர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.  

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக, உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள், இம்மாதம் 23ஆம் திகதி திறந்து விடப்பட்டன.


உன்னிச்சைக் குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், தாம் பாதிக்கப்பட்டதாக, பிரதேச விவசாயிகள் அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அந்தவேளையில் விவசாயிகள் தம்மைத் தாக்கியதாகவும், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.நீர்ப்பாசன அதிகாரிகளைத் தாக்கினர் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில், உன்னிச்சைப் பிரதேச விவசாயிகள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். 


இவர்கள் இருவரும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டனர்.  

அதிகாரிகளைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களான விவசாயிகளை, பிணையில் விடுவித்த நீதவான், வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

தம்மை தாக்கியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages