காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயமருகே இன்று (04) வெள்ளிக்கிழமை மாட்டெலும்புகளுடன் கூடிய கழிவுகள் வீசப்பட்டுள்ளன.
இவ்வாலயம் காரைதீவு நிந்தவூர் எல்லைப்பகுதியில் இந்துமயானத்திற்கருகே அமைந்துள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட விசமிகளின் செயலாக இது இருக்கலாமென நம்பப்படுகின்றது.

தவிசாளர் ஜெயசிறில் சம்மாந்துறைப் பொலிசாருக்கு உடனடியாக முறையிட்டதைத் தொடர்ந்து பொலிசாரும் ஸ்தலத்திற்கு விரைந்து வந்தனர். எனினும் வீசியவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
தவிசாளர் ஜெயசிறில் அந்தஇடத்திலிருந்து கருத்துரைக்கையில்;
மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்துவருகின்ற தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை உண்டுபண்ணும் நோக்கத்திலே இச்செயல் இடம்பெற்றிருக்கிறது.
சூழல் சுற்றாடல் அதிகார சபையினரிடம் இது போன்ற செயற்பாடுகள் தொடர்பாக பல தடவைகள் எடுத்துக்கூறியும் நிகழ்ச்சி நிரலுக்கமைவான செயற்பாட்டை மாத்திரமே செய்கிறார்கள். இத்தகைய ஈனச்செயலைக் கண்டுகொள்கிறார்களில்லை. காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியிலும் இவ்வாறு கழிவுகள்கடந்த காலங்களில் வீசப்பட்டிருந்தன.
காரைதீவில் மாடு அறுப்பது இல்லை. ஆகவே இத்தகைய கழிவுகள் வரச்சந்தர்ப்பமில்லை.
இந்த ஈனச்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
எந்த மதமானாலும் ஏனைய மத ஸ்தலங்களை மதிக்கவேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களை பொலிசார் உடனடியாகக்கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்தி நீதிவழங்குவதோடு இனமுறுகலைத்தவிர்க்கவும் வகை செய்யவேண்டும். என்றார்.
பொலிசார் கூறுகையில்:
இன்றைய சம்பவம் சமகாலசூழலுக்கு ஏற்றதல்ல. ஆனால் இந்தச்செயலைச்செய்தவர்களை உடனடியாக கைதுசெய்யமுடியாதுள்ளது. இனிவருங்காலங்களில் இப்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு இத்தகைய குற்றச்செயலைச் செய்தவர்களைக்கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தவும் தயங்கமாட்டோம்.மக்கள் அதுவரை பொறுமைகாக்கவேண்;டும். என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.