எமது மக்கள் எமது நாட்டு அரசினாலேயே களப்பலியாக்கப்பட்ட மிகவும் காட்டுமிராண்டித் தனமான அந்த நிகழ்வினை மக்கள் என்றும் மறந்து விடப்போவதில்லை. தன் மக்களையே இரத்தக் களரிக்குள் உள்ளாக்கிய நாடு என்ற வகையிலே வெட்கப்படக் கூடிய ஒரு செயலை முள்ளிவாய்க்காலிலே முடித்து வைத்தது கடந்த அரசாங்கம்.
என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (18ஆம் திகதி) கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிரி நாட்டுடன் போர் புரிகின்ற போது கூட சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றிருக்கினற இந்தக் காலகட்டத்திலே தன் சொந்த நாட்டு மக்களின் மீதே சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு விதமான குண்டுகளால் தாக்கி தன் மக்களையே இரத்தக் களரிக்குள் உள்ளாக்கிய நாடு என்ற வகையிலே வெட்கப்படக் கூடிய ஒரு செயலை முள்ளிவாய்க்காலிலே முடித்து வைத்தது கடந்த அரசாங்கம்.
09 ஆண்டுகளைக் கடந்து நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். எமது மக்கள் எமது நாட்டு அரசினாலேயே களப்பலியாக்கப்பட்ட மிகவும் காட்டுமிராண்டித் தனமான அந்த நிகழ்வினை மக்கள் என்றும் மறந்து விடப்போவதில்லை என்பதைக் காட்டும் முகமாகத் தான் வடகிழக்கு எங்கனும் இந்த நிகழ்வினை ஒன்றுகூடி அனுட்டிக்கின்ற அதே நேரத்திலே தங்களுடைய வேண்டுகோளை ஆண்டவனுக்கும் அகிலத்திற்கு விட்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் இந்த கிரான் பொதுமக்கள் தாங்களே முன்வந்து இந்த நினைவேந்தல் தினத்தை மிகச் சிறப்பாக வழிபாட்டுடன் சேர்த்து நடத்தியிருக்கின்றார்கள். மிக அதிகமான மக்களின் பங்களிப்பு இதிலே இருக்கின்றது.
இந்த விடயங்கள் எல்லாம் இலங்கை அரசாங்கத்தினுடைய செவிகளை இன்னும் உரக்கத் திறக்குமாறு கோருகின்றன என்கின்ற அடிப்படையில் அரசு தான் பெற்றிருக்கின்ற இரண்டு வருட அவகாசத்தில் ஒருவருடம் முடிவுற்ற தருவாயில் மிக விரைவில் இதை முடித்து வைக்கின்ற மிக முக்கியமான செயற்பாடான அரைநிலையில் வந்திருக்கின்ற இந்த அரசியமைப்பினை நிறைவேற்றி இந்த நாட்டினை கூட்டாட்சி என்ற நிலைக்குக் கொண்டுவந்து சகல பிராந்தியங்களும் அதிகாரம் பெற்றதாகவும், சுயநிர்ணய உரிமையை வெளிக்காட்டக்ககூடியதுமான விடயத்தைச் செய்திட வேண்டும். இவையெல்லாம் தமிழ் மக்கள் தங்களின் தியாகத்தின் மூலம் தான் செய்து தருகின்றார்கள் என்ற நன்றிக் கடனை இலங்கையில் இருக்கின்ற தமிழர் தவிர்ந்த ஏனைய சகோதர இனத்தவர்கள் புரிந்துகொள்ளவும் வேண்டும். என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.